சென்னை: புதிய அமைச்சர்களுக்கு அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட பங்களாவை கொடுக்க வேண்டியுள்ளதால், முன்னாள் அமைச்சர்கள் பங்களாக்களை காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், உடனடியாக காலி செய்ய முடியாது என அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அமைச்சர்களின் குடியிருப்புகள் சென்னையின் முக்கியப் பகுதியான பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ளன. இங்கு வெறும் வீடுகள் மட்டுமல்லாது, அமைச்சர்கள் தங்கள் தொகுதியிலிருந்து வரும் பொதுமக்களைச் சந்திக்கவும், கோப்புகளை ஆய்வு செய்யவும் வீட்டிலேயே தனியாக அலுவலகம், அமைச்சரின் உதவியாளர்கள், தனிச் செயலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்காகத் தனித்தனி குடியிருப்புகள் ஆகியவை இருக்கின்றன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இங்கு பெரிய பங்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான பங்களாக்கள் விசாலமான புல்வெளி மற்றும் தோட்ட வசதிகளுடன் கூடிய பழங்காலக் கட்டிடக்கலை பாணியில் அமைந்தவை. இந்த பங்களாக்களைப் பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித் துறையிடம் (PWD) உள்ளது. அமைச்சர்கள் பதவியேற்பதற்கு முன்பாக, அவர்களின் ரசனைக்கு ஏற்ப வர்ணம் பூசுதல், மின்சாதனப் பழுதுகள் மற்றும் உட்புற அலங்காரப் பணிகள் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்படும். தற்போது திமுக ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. எனவே பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகர் வாயிலாக முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பதவியை இழந்த உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உதவியாளர்களுக்கு இந்த உத்தரவு பறந்திருந்தது. ஆனால், உடனடியாக பங்களாக்களை காலி செய்ய அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 மாதங்களுக்கு பிறகே பங்களாவை காலி செய்ய முடியும் என்று கறாராக கூறியிருக்கின்றனர்.
வழக்கமாக புதிய அமைச்சரவை பதவியேற்ற 15-20 நாட்களுக்குள், முன்னாள் அமைச்சர்கள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவு பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும். 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதையும் மீறி பங்களா தேவையாக இருக்கிறது எனில் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுத வேண்டும். கோரிக்கை நியாயமாக இருந்தால் 2 மாதங்கள் வரை கட்டணத்துடன் தங்கிக்கொள்ள பொதுப்பணித்துறை அனுமதி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.