Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
நான் ரெடிதான் வரவா? வாய்ப்பு கேட்கும் விஜய்! பத்தல பத்தல.. அடம் பிடிக்கும் ஆளுநர்! ரெடியான அறிக்கை!
தமிழ்

நான் ரெடிதான் வரவா? வாய்ப்பு கேட்கும் விஜய்! பத்தல பத்தல.. அடம் பிடிக்கும் ஆளுநர்! ரெடியான அறிக்கை!

May 09, 2026
1 min read

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழகம் வெற்றிக் கழகம் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறார் விஜய். அரசியல் ஆடுபுலி ஆட்டத்தால் தமிழ்நாடு அரசியல் களமே அதிர்ந்து போய் இருக்கும் நிலையில், 'குதிரை பேரம்' என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் டிடிவி தினகரன். மூன்று முறை ஆளுநரை சந்தித்தும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில் டிடிவி தினகரனின் புகாரால் விஜய்க்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் குதிரை பேர சர்ச்சை தொடர்பாக குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் தயாராகி வருவதாக திடீர் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகு, ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால், தவெக பலம் 117 வரை உயர்ந்துள்ளது.

ஆனால், இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவைப்படுவதால், விஜய் தொடர்ந்து பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமமுக எம்எல்ஏ காமராஜ் காணவில்லை என்றும், அவரை தவெக தரப்பு "குதிரை பேரம்" மூலம் இழுக்க முயற்சிக்கிறது என்றும் தினகரன் குற்றம்சாட்டினார். மேலும், காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக போலி கடிதம் தயாரித்து ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனால், நள்ளிரவு நேரத்திலேயே மக்கள் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது. டிடிவி தினகரன் நேரடியாக ஆளுநரை சந்தித்து புகார் அளித்ததுடன், காமராஜின் பெயரில் போலி ஆதரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, அந்த கடிதத்தில் "காமராஜ்" என்பதற்கு பதிலாக "காம்ராஜ்" என்று எழுதப்பட்டிருந்ததாகவும், அதுவே சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தவெக தரப்பில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், காமராஜ் தானாகவே காரில் அமர்ந்தபடி ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், "அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஒப்புதலுடன் தான் இந்த ஆதரவு வழங்கப்பட்டது" என்றும் அந்த வீடியோவுடன் வெளியிடப்பட்ட தகவலில் கூறப்பட்டிருந்தது. எனினும், அந்த வீடியோ அதிகாரப்பூர்வமாக தவெக தரப்பில் வெளியிடப்பட்டதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த சர்ச்சை தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக மாறியுள்ளது. ஏற்கனவே, பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்காத காரணத்தால், விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மூன்று முறை சந்தித்தும் அழைப்பு விடுக்கவில்லை. "118 உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க அழைக்க முடியாது" என்ற நிலைப்பாட்டில் ஆளுநர் தொடர்ந்து உறுதியாக உள்ளார்

இந்த சூழலில், குதிரை பேர குற்றச்சாட்டு மிகப்பெரிய சட்ட, அரசியல் விவகாரமாக மாறியுள்ளது. குறிப்பாக, எம்எல்ஏக்களை பணம் அல்லது அதிகாரத்தைக் காட்டி இழுக்கும் முயற்சி நடந்ததா என்பது குறித்து ஆளுநர் தரப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பும் நடவடிக்கையிலும் ஆளுநர் மாளிகை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அரசியலமைப்பு ரீதியாக மாநிலத்தில் நிலையான அரசு அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்ற சூழல் ஏற்பட்டால், ஆளுநர் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைக்கலாம். அதனால், தற்போதைய அரசியல் நகர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. தவெக தரப்பின் நடவடிக்கைகள் சட்டரீதியாக சிக்கலை ஏற்படுத்துமா? அல்லது காமராஜ் நேரடியாக ஆதரவை உறுதி செய்வாரா? என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, விசிக இன்னும் தனது முடிவை அறிவிக்காததும் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது. விசிக ஆதரவு கிடைத்தாலும், அறுதிப் பெரும்பான்மை குறித்து இன்னும் குழப்பம் நீடிப்பதால், தமிழகத்தில் அடுத்த அரசை யார் அமைப்பார்கள்? என்ற கேள்வி தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை குதிரை பேர குற்றச்சாட்டு உறுதியானால் விஜய் சிக்கலுக்கு மேல் சிக்கல் தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.