Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
பட்டப்பகலில்.. பலர் முன் பஸ் ஸ்டாண்டில் ஆணவக்கொலை.. கோவில்பட்டியில் கொடூரம்.. கைமீறும் சட்டம் ஒழுங்கு
தமிழ்

பட்டப்பகலில்.. பலர் முன் பஸ் ஸ்டாண்டில் ஆணவக்கொலை.. கோவில்பட்டியில் கொடூரம்.. கைமீறும் சட்டம் ஒழுங்கு

May 19, 2026
0 min read

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணின் கண்முன்னே அவரது காதலன் ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய தவெக ஆட்சி பொறுப்பேற்ற 10 நாட்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. கடந்த 10 நாட்களில் 40க்கும் அதிகமான கொலை சம்பவங்கள் நடந்து உள்ளன.

அந்த வகையில்தான் தற்போது தமிழ்நாட்டை உலுக்கும் வகையில் கொடூரமான ஆணவக்கொலை கோவில்பட்டியில் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சஞ்சய் (வயது 18). இவர் சென்னையில் சிற்பக் கலைஞராக (சிற்ப வேலைப்பாடு) பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கோவில்பட்டி அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் கனகலெட்சுமியைச் சஞ்சய் கடந்த சில காலமாக தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சஞ்சய், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்குத் தெரியவந்தபோது, அவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சஞ்சயுடன் பேசுவதையோ, பழகுவதையோ நிறுத்துமாறு கனகலெட்சுமியை அவரது தந்தை குமார் கண்டித்துள்ளார். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்து வந்துள்ளனர்.

சென்னையில் வேலை பார்த்து வந்த சஞ்சய், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) இரவு சென்னைக்குத் திரும்புவதற்காகத் தனது நண்பர்களுடன் கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்திற்குச் சஞ்சய் வந்துள்ளார். சஞ்சய் பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கும் தகவல் பெண்ணின் தந்தை குமாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, காதலைச் சேர்த்து வைப்பது போலவும், இப்பிரச்சினைக்குச் சமரசமாகப் பேசி தீர்வு காண்பது போலவும் ஒரு நாடகத்தை குமார் அரங்கேற்றியுள்ளார். தனது மகள் கனகலெட்சுமியிடம், "வா, சஞ்சயைச் சந்தித்து உங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசி முடிக்கலாம்" என்று கூறி, அவளையும் அழைத்துக் கொண்டு கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு விரைந்துள்ளார். தந்தையின் பேச்சை நம்பி கனகலெட்சுமியும் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் சஞ்சயைச் சந்தித்த குமார் மற்றும் அவரது உறவினர்கள், ஆரம்பத்தில் சுமுகமாகப் பேசுவது போல் நடித்து, திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்திகளை எடுத்து, கனகலெட்சுமியின் கண் முன்னரே சஞ்சயை சரமாரியாகக் குத்தத் தொடங்கினர்


ஓட ஓட விரட்டிப் படுகொலை: திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த சஞ்சய், ரத்த வெள்ளத்தில் அலறியபடி தப்பிக்க முயன்று பேருந்து நிலையத்திற்குள் ஓடியுள்ளார். சஞ்சயுடன் வந்த அவரது நண்பர்களும் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால், வெறிகொண்ட கும்பல், சஞ்சயை விடாமல் துரத்திச் சென்று, பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் கொடூரமாகக் குத்தியது. இதைப் பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். காதலி கனகலெட்சுமி அலறித் துடித்தபோதும், கொலையாளிகள் சஞ்சயைச் சல்லடையாகக் குத்திச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்தத் தாக்குதலின் போது, குற்றவாளிகளில் ஒருவரான மாரிமுத்து என்பவருக்கும் எதிர்பாராதவிதமாகக் கத்திப்பட்டு காயம் ஏற்பட்டது.

போலீஸ் நடவடிக்கை மற்றும் கைது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சஞ்சயை மீட்டு உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நள்ளிரவில் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த காதலியின் தந்தை குமார் (43), அவரது தம்பி மாரிமுத்து (41) மற்றும் உறவினரான சங்கரநாராயணன் (23) ஆகிய 3 பேரை அடுத்த சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்தனர். காதலியை வைத்தே காதலனை வரவழைத்து, காதலியின் கண் முன்னரே நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரப் படுகொலை, சாதி அல்லது கௌரவப் பின்னணியால் நடந்த ஆணவக்கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான பேருந்து நிலையத்தில் நடந்த இந்த துணிகரக் கொலைச் சம்பவம் கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.