சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவில் இன்று தங்கக் கருட வாகனத்தில் வெண் பச்சை பட்டுடுத்திக் காட்சியளித்தார் வரதராஜ பெருமாள். ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 28 ஆம் தேதி அதிகாலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. காலை 5 மணி அளவில், கோவிலின் மூலவர் சன்னதியிலிருந்து உற்சவர் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கொடி மரத்திற்கு எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என முழக்கமிட, பட்டச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருட முகம் பொறித்த பிரம்மோற்சவக் கொடி ஏற்றப்பட்டது. இதனுடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா முறைப்படி தொடங்கியது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பிரம்மோற்சவத்தின் பத்து நாட்களும், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாகக் கருதப்படும் கருட சேவை உற்சவம், மே 30 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவில் இன்று தங்கக் கருட வாகனத்தில் வெண் பச்சை பட்டுடுத்திக் காட்சியளித்தார் வரதராஜ பெருமாள். சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள், ஆழ்வார் மண்டபத்தில் எழுந்தருளி வைக்கப்பட்டு, விசேஷ ஆராதனை, தீபாராதனை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். தங்கக் கருட வாகனத்தில் ஏறிய பெருமாள், கோயில் வளாகத்தை வலம் வந்து கோபுர வாயிலை அடைந்தபோது, ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
திருத்தேர் உற்சவம் ஜூன் 3 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மீகத் திருவிழா, ஜூன் மாதம் 8-ம் தேதி தீர்த்தவாரியுடன் இனிதே நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறையினர் சிறப்பாகச் செய்துள்ளனர்.