சென்னை: சனிக்கிழமை என்றாலே, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் என ஏராளமானோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் இந்நிலையில் இன்று (ஜூலை 4) சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கீதா, கிருஷ்ணராயபுரம் மணிவண்ணன், கரூர் மணிவண்ணன், திமுகவைச் சேர்ந்த வி.பி.கலைராஜன், நிலக்கோட்டை அன்பழகன், உசிலம்பட்டி பாண்டியம்மாள், ஆலந்தூர் திமுகவைச் சேர்ந்த கன்டோன்மெண்ட் சண்முகம், கூடலூர் ஜெயசீலன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். இதற்கிடையே இன்று பிற்பகலில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் விஜய்.