Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
உள்துறை + நிதித்துறை.. விஜய் கையில் எடுக்கும் முக்கிய 2 துறைகள்.. அப்போ ஆதவ் அர்ஜுனா? முழு பின்னணி
தமிழ்

உள்துறை + நிதித்துறை.. விஜய் கையில் எடுக்கும் முக்கிய 2 துறைகள்.. அப்போ ஆதவ் அர்ஜுனா? முழு பின்னணி

May 06, 2026
1 min read

சென்னை: தமிழக அரசியலில் ஒரு பக்கம் கூட்டணிக் கணக்குகள் அனல் பறக்க, இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கூடத்தில் அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்பு வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. பனையூர் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அனைத்தும் 'பகீர்' ரகம்.

ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் ஒருபுறம் நடந்தாலும், முதல்வர் நாற்காலியில் அமரப்போகும் விஜய், மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக முதல்வர் வசம் உள்துறை இருப்பது வழக்கம். ஆனால், விஜய் ஒரு படி மேலே போய், நிதியமைச்சகத்தையும் (Finance Department) தன் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறாராம். மாநிலத்தின் வரவு - செலவு கணக்குகளில் எந்தவிதமான கறையும் படிந்துவிடக்கூடாது என்பதில் 'விஜய்' கறாராக இருப்பதாகத் தெரிகிறது.


அமைச்சரவை ரேஸில் பல பெயர்கள் அடிபட்டாலும், சில இடங்கள் இப்போதே 'ரிசர்வ்' செய்யப்பட்டுவிட்டன என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

அனுபவம் வாய்ந்த ஜெ.சி.டி. பிரபாகரன் தான் சட்டப்பேரவை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாம். அவரின் அனுபவம் சபையை வழிநடத்த உதவும் எனக் கணக்கு போடப்படுகிறது.

விஜய்யின் நிழலாக வலம் வரும் புஸ்ஸி ஆனந்த், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை (Municipal Administration & Rural Local Bodies) குறிவைத்துக் காய் நகர்த்தி வருகிறார்.


இங்குதான் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் இருந்து மூன்று முக்கியப் புள்ளிகளுக்கு அமைச்சர் பதவி உறுதியாகிவிட்ட நிலையில், ஆர்.கே. நகரில் வெற்றி வாகை சூடிய மரியா வில்சனுக்கு மந்திரி சபையில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. "ஒரே மாவட்டத்தில் பலருக்குப் பதவி கொடுத்தால் மற்ற மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைவார்கள்" என்பதுதான் தலைமை முன் வைக்கும் வாதம். இதனால் மரியா வில்சன் தரப்பு கடும் அப்செட்டில் உள்ளதாம்.

அமைச்சரவைப் பட்டியல் இன்னும் முடிவாகவில்லை என்பதற்குச் சாட்சியாகச் சில மோதல்களும் அரங்கேறி வருகின்றன. ஆதவ் அர்ஜுன் கேட்ட அதே மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறையை நிர்மல் குமாரும் குறிவைக்கிறாராம். இருவரில் யாருக்கு 'லக்' அடிக்கும் என்பது சஸ்பென்ஸ். அதேபோல், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை (PWD & Highways) எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அருண்ராஜ் தரப்போ வணிகவரி மற்றும் உணவுத் துறையைப் பெறத் தீவிரமாகப் போராடி வருகிறது.

தேர்தல் முடிவுகள் என்னவோ சில அதிர்ச்சிகளைத் தந்துள்ளன. குறிப்பாக தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இது தலைமைக்குக் கடும் அப்செட். இதனால், இந்த இரண்டு மாவட்டங்களைத் தவிர்த்துவிட்டு, மற்ற மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்களில் தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. "ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதிநிதித்துவம்" என்பதே விஜய்யின் தற்போதைய ஃபார்முலா.

இவை தவிர சுகாதாரம், கனிம வளம், வீட்டுவசதி வாரியம், சி.எம்.டி.ஏ (CMDA), போக்குவரத்து, பால்வளத்துறை, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு துறைக்கும் குறைந்தது நான்கு பேராவது முட்டி மோதுகிறார்கள். கடைசி நேரத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்? யாரைக் கழற்றிவிடப் போகிறார் விஜய்? கோட்டை வட்டாரத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்!